தமிழ்நாடு

ஓபிஎஸ் தர்ணாவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

ஓபிஎஸ் தர்ணாவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

நிவேதா ஜெகராஜா

அதிமுக அலுவலகத்தில் தொடர்ந்து தாக்குதலும் பதற்றமும் நீடித்து வந்ததை தொடர்ந்து, அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று சீல் வைத்துள்ளனர். சட்டம் ஒழுங்கை காக்க, விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக அலுவலகத்தில் குழப்பம் நீடிக்கும் நிலையில் அங்கு விசாரணை நடத்தற்காக கூறி கிண்டி கோட்டாட்சியர் சாய்வர்தினி நேரில் சில மணி நேரங்களுக்கு முன் ஆய்வு செய்தார். அவருடன் வருவாய் கோட்டாட்சியர் ஜெகஜீவன்ராமும் ஆய்வு செய்தார். இவர்கள் ஓபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓபிஎஸ் தரப்பிடம் மேற்கொண்டு பிரச்னை செய்யாமல் இருக்க வலியுறுத்தினர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தை ஏற்று, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திலிருந்து வெளியே வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் அவர்கள் வெளியேறிய பின்னர் அலுவலகத்துக்கு சீல் வைத்து, அதிமுக அலுவலக பகுதியில் 144 தடை விதிக்கப்படும் எனத்தகவல்கள் வெளியாகின.

தகவல்கள் கசிந்ததை தொடர்ந்து, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தலைமை அலுவலகத்துக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகமானது.

பதற்றத்தை தணிக்க, கூட்டத்தை கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தினர். மேலும் `கூட்டம் கலைந்து செல்லவில்லை என்றால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்’ என்றும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டவிரோதமாக கூடும் போது பிறப்பிக்கப்படும் 145 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வமும் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து அங்கு கூடியுள்ல அவரது ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு அப்பகுதியில் யாரும் சட்டவிரோதமாக கூட்டம் கூடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிமுக அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கதவு சேதப்படுத்தப்பட்டதால் சீல் வைக்க சற்று தாமதமாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கோட்டாட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகே இந்த சீல் அகற்றப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இபிஎஸ் தரப்பை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக அலுவலத்தில் ஒபிஎஸ்-ன் செயல்பாடு தரம் தாழ்ந்தது. தலைமை அலுவலகத்தில் சமூகவிரோத தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். உருட்டுக்கட்டை கலாசாரத்தை உருவாக்க நினைக்கிறார் ஓபிஎஸ். ஓபிஎஸ் உடன் அதிமுகவினர் யாரும் கிடையாது” என்று கூறினார்