தமிழ்நாடு

தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் அதிமுக அரசு பறிகொடுத்து விட்டது - உதயநிதி ஸ்டாலின்...

தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் அதிமுக அரசு பறிகொடுத்து விட்டது - உதயநிதி ஸ்டாலின்...

kaleelrahman

நீட், மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீடு ,அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் தமிழகத்தின் உரிமையை ஆளும் அதிமுக அரசு பறிகொடுத்து விட்டதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கோவை மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு பரப்பும் விதத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை  திமுக இளைஞரணியினர் கிழித்தனர். இதனால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனைக் கண்டித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லையென்று காவல்துறையினர் தடுத்ததால் திமுகவினருக்கும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த ஆர்ப்பாட்டம் போஸ்டர் ஒட்டி அதை கிழித்ததற்காக நடக்கின்ற ஆர்ப்பாட்டம் அல்ல, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்த ஊழலை கண்டித்து நடக்கின்ற ஆர்ப்பாட்டம் என தெரிவித்தார். மேலும், 


அடித்த போஸ்டரில் வேலுமணி பெயரை கூட போட முடியவில்லை. அதற்கு மேல் எங்களுக்கு போஸ்டர் அடிக்க தெரியும். நீங்கள் போஸ்டர் ஒட்டினால் அதற்கு மேல் நாங்கள் போஸ்டர் ஒட்டுவோம். கைது செய்தாலும் பரவாயில்லை. மிசாவை பார்த்த கழகம் திமுக. மக்களால் தேந்தெடுக்கப்பட்ட தலைவர் ஸ்டாலின். டேபிளை பிடித்து முதல்வர் பதவி வாங்கியவர் எடப்பாடி. நீட், மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீடு, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு பறிகொடுத்து விட்டது.

திமுக இளைஞரணியினர் மீது போட்ட வழக்கை திரும்பப் பெறவில்லையென்றால் அடுத்ததாக குனியமுத்தூர் காவல்நிலையம் முன்பு முற்றுகை போரட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்..