தமிழ்நாடு

நாளைய அதிமுக பொதுக்குழு, செயற்குழுவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.. இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

நாளைய அதிமுக பொதுக்குழு, செயற்குழுவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.. இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

நிவேதா ஜெகராஜா

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்காக சென்னை வானகரத்தில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிமுகவின் பொதுக்குழு நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, நாளை காலை 9 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனிடையே, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் நிறைடைந்துள்ளன. மண்டபத்தின் திடலில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவிற்காக தனித்தனி மேடைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில் போல், மின்னணு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, ஸ்கேன் செய்த பிறகே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்குள் செல்லும் வகையில் நவீன நடைமுறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியாட்கள் நுழைவதை தடுக்க, நுழைவு வாயிலில் 20 பரிசோதனை ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பணிகளை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நேரில் ஆய்வு செய்தார். நெடுஞ்சாலை முதல் மண்டபம் அமைந்திருக்கும் இடம் வரை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் படங்கள் அடங்கிய பேனர்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.

நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.