தமிழ்நாடு

கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.... நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்!

கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.... நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்!

நிவேதா ஜெகராஜா

கடந்த ஜூன் மாதம் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வுசெய்த பொதுக்குழு செல்லாது எனக்கோரிய ஓபிஎஸ் மனு மீதான வழக்கின் விசாரணை, இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில், ஜூன் 23 க்கு முன் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

இன்று வெளியான நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

“ * ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் (ஓபிஎஸ் - இபிஎஸ்) இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும்.

* யாரும் தனி கூட்டம் கூட்ட கூடாது.

* பொதுக்குழுவை கூட்ட வேண்டுமெனில், அதற்கென ஆணையரை நியமிக்க வேண்டும்.

* ஜூன் 23 க்கு முன் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும்” என்று கூறினர்.

இதன்மூலம், இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என்றும் தெரிவித்தனர். இப்படியாக இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வெளியாகியுள்ளது. தீர்ப்பையொட்டி ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

ஆடிப்பாடி அவர்கள் கொண்டாடி வரும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தீர்ப்பையொட்டி, எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இபிஎஸ் தரப்பு, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பின்னர், புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகள் விசாரணை நடத்தி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அப்படி இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட இவ்வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.