தமிழ்நாடு

பேனர்கள் அமைக்கும் பணி தீவிரம்.. பிரம்மாண்டமாக தயாராகும் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள்

பேனர்கள் அமைக்கும் பணி தீவிரம்.. பிரம்மாண்டமாக தயாராகும் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள்

kaleelrahman

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான செட் பேனர்கள், அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த வானகரத்தில் வருகின்ற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில், குறிப்பாக பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படம் பதித்து பேனர் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் இணைந்து பூங்கொத்துக்கள் கொடுக்கும் விதமாக அச்சடிக்கப்பட்டு பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரங்குகள், பேனர்கள், முகப்பு அலங்காரங்கள், செய்யும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து பணி நடைபெறும் இடத்தில் இரண்டாவது நாளாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சுமார் 2750 பேர் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், இரு தரப்பினரும் பொதுக்குழுவில் குண்டர்களை வைத்து ரகளையில் ஈடுபட உள்ளதாக குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் திருவேற்காடு போலீசார், ஸ்ரீ வாரு திருமண மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதிகளில் ரவுடிகள், குண்டர்கள், சந்தேகப்படும் படி யாராவது தங்கி உள்ளார்களா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்..