தமிழ்நாடு

"எல்.முருகனை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவது எல்லை மீறிய செயல்!" - கொந்தளிக்கும் அதிமுக

"எல்.முருகனை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவது எல்லை மீறிய செயல்!" - கொந்தளிக்கும் அதிமுக

Veeramani

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்காக வெளியிடப்பட்ட பாடலில் எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தியுள்ளது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரையை ஊக்குவிப்பதற்காக தமிழக பாஜக வெளியிட்டுள்ள வீடியோ பாடலில் அதன் தலைவர் எல். முருகன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகியோரை காண்பித்துள்ளனர். மற்றுமொரு எல்.முருகனின் விளம்பர வீடியோ எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் ஒரு பாடலைப் போலவே அமைந்துள்ளது. மேலும் எம்.ஜி.ஆர் நிலத்தை கொத்துவது , வயலில்  டிராக்டர் சவாரி செய்யும் பல காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி தி இந்து நாளிதழுக்கு பேசிய பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் “காமராஜரைப் போலவே எம்.ஜி.ஆரும் நல்லாட்சியை வழங்கியவர். எம்.ஜி.ஆர் ஒரு நல்ல தலைவராக இருந்தார், அவர் தனது சிறந்த ஆட்சிக்காக நற்பெயரைப் பெற்றார். எங்கள் தலைவர்கள் காமராஜரையும் மேற்கோள் காட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஒரு அடையாளமாக இருந்தார். எனவே நாங்கள் அவரின் படத்தை பயன்படுத்துகிறோம். அதில் எந்த தவறும் இல்லை, ”என்றார்.

பாஜக எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்துவதற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தி இந்துவுக்கு பேசிய அவர் “நமது திராவிட சித்தாந்தமும் இயக்கமும் வேறு. பாஜகவின் சித்தாந்தம் வேறுபட்டது. எங்கள் தலைவரின் காட்சிகள் மற்றும் படங்களை அவர்களின் கட்சி வளர பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கண்டிக்கத்தக்கது. புரட்சி தலைவரின் புகழ் மற்றும் உரிமை அதிமுகவினருக்கு மட்டுமே சொந்தமானது, இதற்கு உரிமை கோருவதற்கான தார்மீக உரிமை மற்ற கட்சிகளுக்கு இல்லை, ”என்று கூறினார்.

மேலும் “பாஜகவில் நல்லாட்சி வழங்கிய தலைவர்கள் குறைவாக இருப்பதால்தான் அவர்கள் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்துகிறார்களா?   எல்.முருகனை எம்.ஜி.ஆருடன் இணைத்து ஒப்பீடுவது எல்லை மீறிய செயல். எம்.ஜி.ஆர் ஒரு பாரத் ரத்னா. மக்கள் இன்னும் அவரை கடவுளைப் போலவே பார்க்கிறார்கள். நீங்கள் யாருடன் யாரை ஒப்பிடுகிறீர்கள்? நீங்கள் உங்கள் வரம்பை மீறவில்லையா? ”என்று கேள்வி எழுப்பியுள்ளார்