அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது puthiya thalaimurai
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது: பின்னணி என்ன? முழு விவரம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் நில மோசடி வழக்கில் கைது சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர் : அன்பரசன்

கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது மகள் ஷோபனாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரகாஷ் மற்றும் மேலகரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் கொடுத்த புகாரில் அதிமுக வழக்கறிஞர் மாறப்பன், ரகு, சித்தார்த், செல்வராஜ் உள்பட 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கரூர் நகர காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மேலும், இந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது ஆதரவாளர்களும் தன்னை மிரட்டியதாக பிரகாஷ் புகாரளித்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த விவகாரமானது சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது என டிஜிபி சங்கர் உத்தரவிட்டிருந்தார்.

சிபிசிடிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது எம் ஆர் விஜயபாஸ்கருக்கு இந்த நில மோசடியில் தொடர்பு உண்டு என்பது கண்டறியப்பட்டது. எனவே இந்த வழக்கில் தாமும் கைது செய்யப்படலாம் என கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது மூன்று முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 25-06-2024 அன்று நீதிமன்றம் மனுதாக்கலை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

மேலும், மதுரை நீதிமன்றத்திலும் எம் ஆர் விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஐந்து தனிப்படைகள் வட மாநிலங்களுக்கும் பல்வேறு இடங்களிலும் விஜயபாஸ்கரை தேடி சோதனைகள் மேற்கொள்ள தொடங்கினர். இந்த நிலையில், கேரள எல்லையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் அவர் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று அங்கு சென்று சுற்றிவளைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை கைதும் செய்துள்ளனர்.

அவர் தனது செல்போன் எண்கள் அனைத்தையும் அணைத்து வைத்துக் கொண்டதும், வேறு ஒரு எண்ணில் ஆன்லைன் மூலமாக பேசி வந்ததால் அவரை பிடிப்பதற்கு தாமதம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒருகட்டத்தில் MR விஜயபாஸ்கர் தன் உறவினருக்கு தொடர்பு கொண்டு பேசியபோது அந்த நெட்வொர்க்கை வைத்து அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாகவும் சிபிசிடிஐ போலீசாரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் CBCID மத்திய மண்டலம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால், சிபிசிஐடி மத்திய மண்டலத்திற்கு எஸ்பி பணி காலியிடம் என்பதால் சிபிசிஐடி மேற்கு மண்டல எஸ் பி ஸ்ரீதேவி தலைமையிலான சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரிடம் மேற்கு மண்டல சிபிசிஐடி எஸ்பி ஸ்ரீதேவி விசாரணை நடத்த உள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை தமிழகம் அழைத்து வருவதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இங்கு மேற்கு மண்டல சிபிசிஐடி எஸ்பி ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணையில் ஈடுபட உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.