`எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வுசெய்த பொதுக்குழு செல்லாது’ என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கியிருந்தார். இதற்கு ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்த தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் புதிய தலைமுறையுடன் பேசினார். அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆர். அதிமுக-வை ஆரம்பித்த போது, அவரை திமுக-வில் இருந்து அக்கட்சியினர் நீக்கியிருந்தனர். அப்போது திமுக-வில் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவின் பேரில் அக்கட்சியின் தலைவர்கள் அப்படியொரு நடவடிக்கையை எடுத்தனர்.
அக்கட்சியினரின் அச்செயலை மனதில் வைத்து, `அதிமுகவில் தொண்டர்களாலும், கழக உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர், தலைவரெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்ற சட்டவிதியை அவர் வகுத்தார்.
எம்.ஜி.ஆர். வகுத்த விதி, இன்று கொடுக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா உயிரோடிருந்த போது நிறைவேற்றப்பட்ட `ஜெயலலிதாதான் அதிமுக-வின் நிரந்தர பொதுச்செயலாளர்’ என எடுக்கப்பட்ட தீர்மானமும் இன்று காப்பாற்றப்பட்டிருக்கிறது. இதேபோல தொண்டர்களுக்கு எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா கொடுத்த மரியாதை இன்று காப்பாற்றப்பட்டிருக்கிறது.
எதேச்சதிகாரமாக எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா புகழுக்கும் இந்த இயக்கத்திற்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்ட இபிஎஸ்-ஐ, அவர்கள் இருவரின் ஆத்மாவும் மன்னிக்காது” என்றார்.