தமிழ்நாடு

சாதி பாகுபாட்டுடன் செயல்பட்ட அதிமுக நிர்வாகி மீதான வழக்கை முடித்துவைத்தது நீதிமன்றம்

நிவேதா ஜெகராஜா

அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி வரும் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க கோரியும்; அவர் சார்ந்துள்ள அதிமுக கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய கோரியும் தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்த கயல்விழி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள முனியசாமி மற்றும் அவரது மனைவி கீர்த்திகா முனியசாமி உள்ளிட்டோர் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் உறவினரான நான், கல்லூரியில் படித்து வந்த பொழுது மாற்று சமூகத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரை காதலித்துவந்தேன். இதைத்தெரிந்து, முனியசாமி தலைமையிலான உறவினர்கள் என்னை ஆணவக் கொலை செய்வதற்காக முயற்சி செய்தனர். செல்வகுமாருடனான எனது உறவை துண்டிக்க செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி, நானும் செல்வகுமாரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இதைத்தெரிந்துக்கொண்ட, முனியசாமி அவர் சார்ந்திருந்த அதிமுக கட்சியின் அதிகார பலத்தை கொண்டு எங்களை மிரட்டத்தொடங்கினார். தற்போதுவரை இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதிகள் சாதி மற்றும் மத ரீதியான பாகுபாடு பார்க்கக்கூடாது என்று கூறுகின்றது. ஆனால் முனியசாமி, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக கடந்த 8 ஆண்டுகளாக என் மீது பாகுபாடு காட்டுகிறார். அவரும் அவர் சார்ந்த உறவினர்களும் என்னை பல வகைகளில் தொந்தரவு செய்து வருகின்றனர். தற்போது அதிமுக மாவட்ட செயலாளராக இருக்கும் முனியசாமி மற்றும் அவரது மனைவி கிருத்திகா முனியசாமி மற்றும் இவர்கள் சார்ந்திருக்கும் அதிமுக கட்சி உள்ளிட்டோர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணைய விதிமுறையை பின்பற்றாமல், சாதி பாகுபாடு பார்க்கும் அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, வரும் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். முனியசாமி சார்ந்துள்ள அதிமுக கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் “வழக்கில் பொது நலம் இல்லை. தனி நபர் பாதிப்பு குறித்த மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டும்” என கூறியிருந்தனர். இந்நிலையில் இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “முனியசாமி மீது நடவடிக்கை கோரிய மனுவை மட்டுமாவது பரிசீலிக்கவும். அதுகுறித்து உத்தரவிடவும்” என கோரப்பட்டது.

இதையேற்ற நீதிபதிகள், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் தொடர்ச்சியாக இடையூறு செய்து வரும் அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி மீது நடவடிக்கை கோரி கயல்விழி தொடர்ந்த மனுவை பரிசீலித்து ‘8 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க’ ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

- இ.சகாய பிரதீபா