EPS- OPS File image
தமிழ்நாடு

இந்த நிலை நீடித்தால் அதிமுக ஆட்சியமைக்க முடியாது – ஓபிஎஸ்

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PT WEB

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'அதிமுகவில் இருந்து யாரும் பிரிந்து போகவில்லை, கட்சியில் நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டதுதான், ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை' என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'அனைவருக்குமான கட்சி என்ற நிலை, துரோக கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதால், அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. 45 விழுக்காடாக இருந்த அதிமுக வாக்கு வங்கி தற்போது 20 விழுக்காடாக குறைந்துவிட்டது.

இதே நிலை நீடித்தால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக ஆட்சியமைக்க முடியாது என்பது மட்டுமின்றி அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே செல்லும். அதிமுக வீறுகொண்டு எழ வேண்டுமென்றால் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும், பிரிந்தவர்கள் ஒன்றிணைய பண்புள்ளவர்கள் தலைமை பதவிக்கு வரவேண்டும்" என்று ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.