தமிழ்நாடு

காஞ்சிபுரம்: தெருக்கூத்து கலைஞர்களுடன் சென்று பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர்

காஞ்சிபுரம்: தெருக்கூத்து கலைஞர்களுடன் சென்று பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர்

webteam

காஞ்சிபுரத்தில் தெருக்கூத்து கலைஞர்களின் உதவியுடன் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி தனக்கு வாக்கு சேகரித்துள்ளார் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளரொருவர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதை தொடர்ந்து அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் அனைத்துக் கட்சியினரும் ஈடுபட்டு வருகிறார்கள். பிரசாரத்திற்கு குறுகிய நாட்களே இருக்கும் காரணத்தினால் வேட்பாளர்கள் விதவிதமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அந்தவகையில் சுங்குவார் சத்திரம் பகுதியில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி கார்த்திக் ஆகியோர் இன்று திருமங்கலம், திருமங்கலம் கண்டிகை சுங்குவார்சத்திரம் வடமங்கலம் ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது தெருக்கூத்து கலைஞர்களை வைத்து உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்கு அளிக்க வலியுறுத்தியும், கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து எவ்வாறு மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தியும் தங்களின் பிரசாரத்தை மேற்கொண்டார்கள் அவர்கள்.

மேலும் தங்களின் வாக்குறுதியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு தெருக்கூத்து கலைஞர்களின் நாடகம் வழியாக நூதன முறையில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மந்தையிலும் தனது பிரசாரத்தை மேற்கொண்டனர். தெருக்கூத்து கலை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. இருந்தாலும் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை தெருக்கூத்துக்கலை கிராம மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிய இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோயில் சடங்குகளில் தெருக்கூத்து முக்கிய இடம் பிடிக்கும். தெருக்கூத்தில் பெரும்பாலும் மகாபாரத கதைகள் அடிப்படையாக இருக்கும். புராணம், பக்தி கதைகள் ஆகியவற்றை மையமாக வைத்தும் இந்த தெருக்கூத்துகள் நடத்தப்பட்டு வந்தது.

இப்படி இருந்த தெருக்கூத்து கலை காலப்போக்கில் மறைந்தது. அதை மீண்டும் நினைவுகூறவே இப்படியான ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பிரசாரத்தின்போது தெருக்கூத்து கலைஞர்கள் தங்களுடைய எளிய நாடகத்தின் வழியாக மக்களிடம் எடுத்துக் கூறினார்கள். தேர்தல் பிரசாரத்தில் தெருக்கூத்து கலைஞர்கள் பயன்படுத்தியது கிராம பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.