தமிழ்நாடு

அதிமுக உட்கட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்யும் இபிஎஸ்

அதிமுக உட்கட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்யும் இபிஎஸ்

kaleelrahman

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு மீண்டும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அதிமுக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று கழக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இரண்டாம் கட்டமாக மாநகர் புறநகர் என 38 மாவட்ட பதவிகளுக்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. சேலம் மாவட்ட அளவில் சேலம் புறநகர் மாவட்டம் மற்றும் மாநகர் மாவட்ட கழகத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது.

சேலம் புறநகர் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான அர்சுனன், நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகர் மாவட்டத்திற்கு அமைப்புச் செயலாளர் சின்னசாமி மற்றும் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

முன்னாள் முதல் அமைச்சரும் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்