சீமான், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

நாம் தமிழருடன் கூட்டணி? அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்ததென்ன?

PT WEB

நாம் தமிழருடன் கூட்டணி வைக்கிறதா அதிமுக?

பாமகவுடன் கூட்டணி வைக்காததால் வட மாவட்டங்களில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது என அதிமுகவினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க அதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக 3 ஆவது நாளாக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், அதிமுக தோல்வி அடைந்தது குறித்து அத்தொகுதி நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது. அப்போது கட்சித் தலைமை ‘யாருடன் கூட்டணி வைக்கலாம்?’ என கேட்ட நிலையில், ‘நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும்’ என கட்சி நிர்வாகிகள் பலரும் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் ‘பாமக உடன் கூட்டணி வைத்திருந்தாலும் அரக்கோணம் போன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும்’ என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

2001ஆம் ஆண்டு நடந்தது மீண்டும் நடக்குமா?

1999 ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஜெயலலிதா இதேபோன்று, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதாகவும், 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்ததாகவும், 25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஓபிஎஸ், டிடிவி, சசிகலா போன்றவர்களின் ஆதரவாளர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் போன்ற முக்கிய தகவல்களையும் கட்சியின் தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் சொல்வதென்ன?

அதேசமயத்தில் அதிமுக நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையில் இருக்கும் நட்புறவு என்பதோ தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரி சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்தது. அதற்கான நன்றியையும் எடப்பாடி பழனிசாமி மேடையில் தெரிவித்தார்.

சாட்டை துரைமுருகன் கைதிற்கும் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். ஆனால் இடும்பாவனம் போன்ற கட்சியின் பிற நிர்வாகிகள், திராவிட கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் இயக்கத்தையே தொடங்கினோம். எனவே கூட்டணிக்கு சாத்தியமில்லை என்றே தெரிவித்து வருகின்றனர்.

சீமான்

இருந்தபோதும், கூட்டணி வைப்பது என்பது அந்தந்த பகுதிகளில் இருக்கும் தொண்டர்களின் கருத்து என்பதும் தலைமை இதுதொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.