14 வயது சிறுமி புதிய தலைமுறை
தமிழ்நாடு

13வருடத்திற்கு முன்பு காணாமல்போன குழந்தையின் 14வயது புகைப்படம் AI-ல் உருவாக்கம்! பெற்றோர் நம்பிக்கை

சென்னையில் 13 வருடத்திற்கு முன்பு காணாமல் போன பெண் குழந்தையை கண்டுபிடிக்க தமிழக காவல்துறை நவீன முறையில் களம் இறங்கியுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையால் குழந்தையை இழந்த பெற்றோர் நம்பிக்கையை அடைந்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர் - ஜெ.அன்பரசன்

சென்னையில் 13 வருடத்திற்கு முன்பு காணாமல் போன பெண் குழந்தையை கண்டுபிடிக்க தமிழக காவல்துறை நவீன முறையில் களம் இறங்கியுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையால் குழந்தையை இழந்த பெற்றோர் நம்பிக்கையை அடைந்துள்ளனர்.

நடிகர் கமலஹாசன் மற்றும் நடிகை குஷ்பூ நடித்து வெளியான திரைப்படம் சிங்காரவேலன். இதில் சிறுவயதில் இருக்கும் குஷ்புவின் புகைப்படத்தை வைத்து தொழில்நுட்பம் மூலமாக 18 வயதில் எவ்வாறு இருப்பார்கள் என கணினி மூலம் வடிவமைக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும்.

90களில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சி நிஜமாக்கப்படும் வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது அதே சினிமா பாணியில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி 13 வருடத்திற்கு முன்பாக காணாமல் போன இரண்டு வயது பெண் குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக காவல்துறை தீவிரமாக இறங்கி உள்ளது.

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கணேஷ் - வசந்தி என்ற தம்பதியினருக்கு பிறந்த இரண்டு வயது பெண் குழந்தை கவிதா வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மாயமாகியுள்ளார். அக்கம்பக்கத்தில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்து பல்வேறு விதமாக முயற்சித்தும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை இருப்பினும் காவல்துறை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு வந்தது பெற்றோர்கள் காவல்துறையினரை அணுகியுள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது பெற்றோர்கள் அப்போது காவல்துறை ஆணையராக இருந்த ஜே கே திரிபாதி கவனத்திற்கு கொண்டு போய் உள்ளனர். இதனையடுத்து குழந்தை காணாமல் போன வழக்கை மத்திய குற்றத்திற்கு மாற்றிய உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர் .அந்த ஆட்கொணர்வு மனுவும் பெற்றோர்களுக்கு தெரியாமலேயே வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேறு வழியின்றி குழந்தையை கோயில்களிலும், ஜோசியர்கள் மூலமாக என நம்பிக்கை இழக்காமல் தேடி கொண்டிருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை முடித்து வைக்கப்பட இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கும் பொழுது, பெற்றோர்கள் கடந்த 2023 பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைக்க விருப்பமில்லை என மனு தாக்கல் செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குழந்தையின் தந்தை கணேஷ் தொடர்ந்த மனு மீதான விசாரணையின் அடிப்படையில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

அதில் இன்னும் ஆறு மாதத்திற்கு குழந்தையை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் கூடுதல் துணை ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு வயது குழந்தையின் புகைப்படத்தை வைத்து புதிய யுக்தியில் போலீசார் தேடுதல் பணியை ஆரம்பித்தனர். வழக்கமான பாணியில் தேடல் ஆரம்பிக்காமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தையை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர். காணாமல் போன கவிதாவின் ஒரு வயது மற்றும் இரண்டு வயது புகைப்படத்தை பயன்படுத்தி 13 வயது கழித்து எவ்வாறு இருப்பார்? என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தையின் புகைப்படத்தை உருவாக்க ஆரம்பித்துள்ளனர்.

அந்த அடிப்படையில் தமிழக காவல் துறை சைபர் நிபுணர்களை பயன்படுத்தி 2 வயதில் காணாமல் போன கவிதா எவ்வாறு இருப்பார் என புகைப்படம் ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த புகைப்படத்தை பெற்றோர்களான கணேசன் மற்றும் வசந்தியிடம் காட்டும் பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கண்டிப்பாக 14 வயதில் தனது குழந்தை கவிதா இவ்வாறு தான் அழகாக இருப்பார் என பெற்றோர்கள் ஆனந்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு மூலம், 14 வயது தோற்றத்தில் உள்ள காணாமல் போன குழந்தை கவிதாவின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பியும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி இருப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகளை எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு காவல் துறை அதிகாரிகள் பெற்றோர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

13 வருடத்திற்கு முன்பு காணாமல் போன குழந்தையின் தற்போதைய படத்தை தமிழக காவல்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கியுள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர் தெருவித்துள்ளனர்.