paddy cultivation File Image
தமிழ்நாடு

'சாகுபடி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்க' - விவசாயிகளுக்கு வேளாண் துறை முக்கிய அறிவுரை!

ஓமலூர் வட்டார விவசாயிகள் தங்களது சாகுபடி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஓமலூர் வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். இதன் மூலம் மானியங்கள், திட்டங்களை பெற எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

சேலம் மாவட்டம் ஓமலூர், வட்டாரத்தில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பூக்கள், காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். ஒருசில நேரங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில், ஓமலூர் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உதவி இயக்குநர் பிரேமா, விவசாயிகளுக்கு பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் வேளாண்மை துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தனிநபர் மற்றும் நில உடமை ஆவணங்கள், பயிர் சாகுபடி விவரம் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ள வேண்டும். விவசாய விவரங்கள் நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்வதால், முன்னுரிமை அடிப்படையில் அரசின் துறை சார்ந்த திட்டங்களுக்கு, விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். அதனால், அதற்கேற்றவாறு அரசு திட்டங்களில் உள்ள பயன்களை விவசாயிகளுக்கு எளிதாக வழங்க முடியும்.

மேலும், இத்திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பரிமாற்றம் மூலம் விவசாயிகள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்ப வழிவகிக்கிறது. இதற்காக ஓமலூர் வட்ட விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், நிலப்பட்டா ஆவண நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், விவசாயிகள் விரைவாக பதிவிடவேண்டும் என்றும் மேலும், தகவல்களுக்கு அந்தந்த வேளாண்மை அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.