தமிழ்நாடு

இது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை

இது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை

webteam

கொரோனா பரவல் தொற்றைக் கையாள முடியாமால் உலக நாடுகள் திக்குமுக்காடி கொண்டிருக்க, அடுத்தப் பிரச்னையாக வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்கெனவே கென்யா, சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னார் ஐநா அமைப்பு இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் என எச்சரித்திருந்தது.

அதன்படி வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.இந்நிலையில் தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பதாகவும், பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து கூடலூர் - நீலகிரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.

அதில், தமிழக கேரள எல்லையில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் பயிர் சேதம் ஏற்படுத்தும் லோகஸ்ட் வகையை சேர்ந்தவை அல்ல என தெரிவித்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரியிலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பதாக செய்திகள் பரவின. உடனடியாக மாவட்ட வேளாண்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பின் பேசிய வேளாண்துறை இணை இயக்குநர், கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை; லோக்கல் வெட்டுக்கிளி தான். எருக்கன் செடிகள், வாழை, பப்பாளி இலைகளை தின்ற உள்ளூர் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நீலகிரி, கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுவதால் வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.