அன்றாடம் தவழ்ந்து விளையாடும் கடல் ஒருநாள் சீறியதன் கோரம்தான் 2004ம் ஆண்டு டிசம்பர் 26.
2004ம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுப்பிய துயரத்தில் கடலோர மக்கள் இன்றும் உழன்று கொண்டிருக்கின்றனர்.
2004ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் 9.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் இந்தோனிசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவை பொருத்தவரையில் தமிழக கடலோர மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டன.
வழக்கமாக கடலில் எழும் அலைகளை விட 30 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்தன. 30 மீட்டர் என்பது கிட்டத்தட்ட 100 அடி. நினைத்துப்பார்க்கக் கூட முடியாத கோரத்தை இந்த அலைகள் கண்முன் காட்டிவிட்டுச் சென்றது. உலகின் மிக மோசமான சீரழிவுகளில் 6 ஆவது பேரழிவு என 2004 ஆம் ஆண்டு சுனாமி குறிப்பிடப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மனித சமூகத்திற்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவரை விஞ்ஞானிகளால் சுனாமி வரும் நேரத்தை மட்டுமே கணிக்க முடிந்தது. ஆனால் இன்றோ சர்வதேச நாடுகள் பலவும் தற்போது தகுந்த முன்னெச்சரிக்கைகளோடு உள்ளன.
சென்னையில் கடற்கரையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள், மீனவ மக்கள், கடற்கடை வியாபாரிகள் என நூற்றுக்கணக்கான மக்களை சுருட்டி இழுத்துச் சென்றது 2004 ஆழிப்பேரலை. இதேபோல் நாகையிலும் பேரழிவை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி, வேளாங்கண்ணி, கடலூர் என அனைத்து கடலோர மாவட்டங்களையும் சூறையாடியது சுனாமி. தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டதோடு ஏராளமானோர் காணாமல் போயினர் என தெரிவிக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் மட்டும் 1,67,540 பேர் உயிரிழந்தனர். 14 நாடுகளிலும் ஏறத்தாழ 2,27,000 மக்கள் உயிரிழந்தனர். இலங்கையில் 35,000 பேரும், இந்தியாவில் 16,000 பேரும், தாய்லாந்தில் 8,000 பேரும் உயிரிழந்தனர். பொருள் இழப்புகள் என மதிப்பிடப்பட்டது மட்டும் ரூ.10 பில்லியன் என குறிப்பிடப்படுகிறது.
சுனாமி ஏற்பட்டு இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டப்போதும், நினைக்கும் போதெல்லாம் பலருக்கும் இன்றளவும் மனதில் ஒருவித பதற்றத்தை கொடுக்கும் அது. அதனாலேயே இந்நாளை கருப்பு தினமாக அனுசரிக்கும் மீனவர்கள் கடற்கரைகளில் நின்று சுனாமியால் இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். டிசம்பர் 26 ஆம் தேதியில் மீனவ கிராம மக்கள் பெரும்பாலும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்வதில்லை.
கடற்கரையோர மீனவ கிராம மக்கள் கடலுக்கு வந்து கடலை வணங்கி பாலூற்றி மலர் தூவி நினைவஞ்வலி செலுத்துவார்கள். கடலூர் சோனாகுப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் கூறுகையில், “அன்னைக்கு வீட்லதான் இருந்தோம். திடீர்னு தண்ணீ வந்ததுல என்னோட ஒருவயசு குழந்தை இறந்துடுச்சு. தூங்கிக்கொண்டிருந்த என்னோட குழந்தை தண்ணீரோடு போயிடுச்சு. எங்களை தண்ணீ கொஞ்சம் போனதும் தூக்கிட்டு போய் காப்பாத்திட்டாங்க. ஆனா குழந்தையை தூக்க முடியவிலை. தண்ணீ எம்புள்ளய அடிச்சிட்டு போய்டுச்சு. அதுல இருந்து தண்ணீர் என்றாலே பயம் எங்களுக்கு. இந்நேரம் என்புள்ள இருந்திருந்தா, 21 வயசு ஆகிருக்கும்” என்கிறார் வேதனையுடன்.
சுனாமியைத் தடுக்க முடியாது. ஆனால் அதன் பாதையை கண்டறிந்து அதன் தாக்கங்களைக் கணிக்க முடியும். கடலோரங்களில் உள்ளவர்கள் தங்களை பாதுகாப்பாக உணரலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.