வடசென்னை மக்கள் pt web
தமிழ்நாடு

நிவாரண டோக்கன் வாங்க மறுத்து MLAவை முற்றுகையிட்ட மக்கள்; கொருக்குப்பேட்டையில் பரபரப்பு- ஒருவர் காயம்

கொருக்குப்பேட்டையில் டோக்கன் வாங்க மறுத்த பொதுமக்கள், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசரை முற்றுகை.

PT WEB

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சில பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடியாத சூழல் உள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தும், மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியும் வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மிக்ஜாம் புயல்

அதேசமயத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளுடனும், எம்.எல்.ஏ.க்களுடம் வாக்குவாதம் செய்த நிகழ்ச்சிகளும் ஆங்காங்கு நடந்த வண்ணம் தான் உள்ளன. இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையில் ஆர்.கே.நகர். சட்டமன்ற உறுப்பினர் எபினேசரின் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண டோக்கன் வழங்கப்பட்டது.

அப்போது அப்பகுதியில் ஒன்று திரண்டு வந்த பொதுமக்கள் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசரை பார்த்து, “இந்த மழை வெள்ளத்தால் வீடு, உடமைகள் எல்லாம் பறிகொடுத்து விட்டோம். எட்டு அடி மழைநீரில் தத்தளித்த போது இங்கு மக்கள் இருக்கிறார்களா, இறந்தார்களா, என எட்டிக்கூட பார்க்காத உங்களுக்கு டோக்கன் ஒரு கேடா, மழை முடிந்து 7 நாட்களாக தத்தளித்தோம், பசியால் பறிதவித்தோம் இது எல்லாம் தெரியாதா?” என மக்கள் சரமாரியான கேள்விகளை கேட்டு முற்றுகையிட்டனர்.

பதில் கூற முடியாத எம்.எல்.ஏ எபினேசர் மற்றும் திமுக கட்சியை சார்ந்த நிர்வாகிகள் சேர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலரிடையே தாக்குதலும் ஏற்பட்டது. இதன்காரணமாக ஒரு சிலர் காயமடைந்ததனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் போர்களம் போல் காணப்பட்டு பரபரப்பானது, தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் பலத்த காயத்துடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.