நயினார் நாகேந்திரன்  முகநூல்
தமிழ்நாடு

நயினார் நாகேந்திரன் சிக்கினாரா? வெளியான வாக்குமூலம்...!

ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “பணம் கொண்டுவரும் நபர்களின் பாதுகாப்பிற்காக , நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் கேட்டதால்தான் என்னிடம் வேலைப்பார்க்கும் இரண்டு நபர்களை அனுப்பிவைத்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இதனை எடுத்துவந்த சதீஷ், பெருமாள், நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடத்தில், தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் தேர்தல் பணப்பட்டுவாடாவிற்காக நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் எடுத்து வர சொன்னதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து அவர்கள், “இது நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் மற்றும் அவரது நண்பர்கள் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோர் கொடுத்து அனுப்பிய பணம்” என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட இம்மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.

இதில், நயினார் நாகேந்திரன் உறவினர் முருகனிடம் நடத்திய விசாரணையில், “எனக்கும் இந்த பணத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் பணம் எடுத்து வரும் நபர்களுக்கு பாதுகாப்பிற்காக தாம்ரம் ரயில்நிலையத்திற்கு இரண்டு ஆட்களை அனுப்பி வைக்குமாறு கேட்டார். இதனால்தான் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரை ரயில்நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முருகன் சென்னையில் 4 ஹோட்டல்களை லீசுக்கு எடுத்துள்ளதாகவும், இதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோர் பணிப்புரிந்து வந்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப தாம்பரம் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே, நயினார் நாகேந்திரனுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் 10 நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்தார். இந்நிலையில், முருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருக்கு மீண்டும் நாளை சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.