தமிழ்நாடு

குழந்தைகள் விற்பனை வழக்கில் இதுவரை 12 பேர் கைது !

webteam

குழந்தைகள் விற்பனை தொடர்பாக சுகாதாரத்துறை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உள்ள நிலையில் குழந்தைகள் விற்பனையில் துணை புரோக்கர்களாக செயல்பட்ட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த செவிலியர் அமுதா உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு முறைகேடாக பிறப்புச் சான்றிதழும் பெற்று தரப்பட்டதாக தெரிகிறது. இதனால் வழக்கில் சம்பந்தபட்ட அனைத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே ராசிபுரம் மற்றும் கொல்லிமலை சுற்றுவட்டாரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆராயும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டபோது, 20 குழந்தைகள் மாயமான அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதனையடுத்து  தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆராய சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கொல்லிமலை பகுதிகளில் குழந்தை விற்பனையில் துணை புரோக்கர்களாக செயல்பட்டதாக பர்வீன், அருள்சாமி, ஹசினா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் மூவரும் கோவை, ஈரோடு, வேலூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக கருமுட்டை பெற்றுக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மூலமாக 12 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

இதனைதொடந்ர்து இவர்களுக்கு உதவியாக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் லோகேஷ் என்பவரும் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். குழந்தைகளை விற்ற மற்றும் வாங்கியவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தெரிவித்துள்ளார். பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக இதுவரை செவிலியர் அமுதா உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது