தமிழ்நாடு

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்: நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி!

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்: நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி!

rajakannan

கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். அப்போது, எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் போராட்டத்தை கைவிட வேண்டும், இல்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்தது. அப்போது, போராட்டத்தை வாபஸ் பெற நிர்வாகிகள் கால அவகாசம் கேட்டனர். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

மேலும், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை ஒருமணி நேரத்தில் நீக்க முடியும் என்பது போன்ற எச்சரிக்கைகளையும் நீதிபதிகள் கூறினர். நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து, போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. நீதிபதிகள் கேட்டுக் கொண்டதால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனிடையே, போராட்டத்தை கைவிடும் ஊழியர்கள் பிற்பகல் 2 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பேச்சுவார்த்தைக்காக வரும் 21-ம் தேதி தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதிகள் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவாக இன்று போராட்டத்தில் குதித்த தலைமைச் செயலக ஊழியர்களும் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.