தென்காசியில் தன் வீட்டாரால் கடத்தப்பட்டு பின் தேடப்பட்டு வந்த புதுமணப்பெண்ணின் வழக்கில், மணமாணவருடன் தான் நலமாக இருப்பதாக வீடியோ வெளியீட்டுள்ளார் அப்பெண்.
சில தினங்களுக்கு முன்னர் தென்காசி அருகே வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால், மணமகன் கண்முன்னேயே மணமகளை அவரது வீட்டாரேவும் தூக்கிச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து பெண்ணின் தந்தை உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அப்பெண்ணை கண்டறிய 5 தனிபப்டைகள் அமைத்து போலிசார் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து தற்போது பெண் பேசியுள்ள வீடியோ வெளியாகி உள்ளது.
தென்காசி மாவட்டம் கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்த வினித்தும், அதே பகுதியில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த நவீன் என்பவர் மகள் கிருத்திகாவும் ஒரே பள்ளியில் பயின்ற போது காதலித்து வந்ததாகவும், சுமார் 6 வருடம் இவர்கள் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்ற ஆண்டில் வினித்துக்கு கல்லூரி முடிந்துள்ளது. படிப்பு முடிந்த கையுடன், வினித் சென்னையில் பணிபெற்றுள்ளார். தொடர்ந்து கடந்த 26.12.2022 அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கன்னியாகுமாரியில் 27 ம் தேதியன்று நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் முன்னிலையில் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
பின் கடந்த 04.01.23 அன்று, தங்கள் மகளை காணவில்லை என குற்றாலம் காவல் நிலையத்தில் பெண்ணின் வீட்டார் புகாரளித்துள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் இருவரிடமும் விசாரித்ததாகவும், அப்போது அப்பெண் `கணவனுடனே செல்வேன்’ என கூறியதாகவும், `பெண்ணிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை’ என கூறி பெண் வீட்டார்கள் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வினித் தரப்பிலிருந்து, `பெண் வீட்டாரால் எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ என முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் விசாரணைக்கு இருதரப்பினரும் காவல் நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் வினித் வீட்டாரும், கிருத்திகாவும் வந்துள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்தும் கிருத்திகா வீட்டார் வராததால் சென்று உணவருந்திவிட்டு வருமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது அவர்கள் தென்காசியின் குத்துக்கல் வலசை அருகே காரில் சென்ற போது, பெண் வீட்டார் அவர்கள் சென்ற காரை வழிமறித்தனர். தொடர்ந்து கிருத்திகாவை தூக்க முயற்சிக்கும் போது அருகே உள்ள ஷாமில்லுக்குள் கிருத்திகா தப்பித்து ஓடியுள்ளார். அங்கு சென்று கிருத்திகா வீட்டார், அவரை தரதரவென தூக்கி சென்றனர். இவையாவும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி, வெளியானது. பார்ப்போரை அச்சுறுத்தும் வகையிலான அக்காட்சிகள் வெளியானதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடைய செய்தி: தென்காசி: கணவன் கண்முன்னே புதுமணப்பெண்ணை கடத்திய சம்பவம் - தந்தை உட்பட 7 பேர் மீது வழக்கு
அதனை அடுத்து வினித் தரப்பினர், தன் மனைவியை அவரது வீட்டார் வாகனத்தை மறித்து தாக்கி கடத்தி சென்றதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கிருத்திகாவின் தந்தை நவீன் படேல் உட்பட ஏழு பேர் மீது ஆள் கடத்தல், கொலைமிரட்டல், உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கிருத்திகாவை தேடி வந்தனர். பின்னர் இவ்வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த பெண் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது அதில் ஏற்கனவே தான் வேறு ஒருவருடன் மணமாணவர் எனவும், தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். `எல்லாம் என்னாலேயே நிக்ழ்ந்தது. என் விருப்பபடியே நடந்தது’ எனவும் கூறுகிறார் அவர். அவர் குறிப்பிட்டுள்ள அந்நபர், அவர் சார்ந்த அதே சமூகத்தை சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவில் அவர், “எனக்கு மைத்ரிக்குடன் திருமணமாகிவிட்டது. நான் அவருடனும் என் பெற்றோருடனும் வசித்து வருகின்றேன். எனக்கு எந்தவிதமான அழுத்தமோ, டார்ச்சரோ தரப்படவில்லை. இதுக்கு சம்பந்தப்பட்டு, எங்காவது ஏதாவது பிரச்னை நடந்தால், அது எதுவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இங்கு எல்லாம் என் சம்மதத்துடனேயே நடந்தது” என்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.