தமிழ்நாடு

மொட்டை மாடிக்கு செல்லவே பயம்! தாழ்வான மின்னழுத்த கம்பிகளால் அவதிப்படும் மக்கள்!

மொட்டை மாடிக்கு செல்லவே பயம்! தாழ்வான மின்னழுத்த கம்பிகளால் அவதிப்படும் மக்கள்!

webteam

தாழ்வாக செல்லும் உயர்மின்னழுத்த கம்பிகளால் தங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு செல்லக் கூட பயமாக இருப்பதாக கோவை மசக்காளிப்பாளையம் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மின்பாதையை புதைவட தடமாக மாற்றி எடுத்து செல்ல வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை டாடாபாத் துணை மின்நிலையத்தில் இருந்து கள்ளிமடை பகுதியில் உள்ள சிங்காநல்லூர் துணை மின் நிலையத்துக்கு 110 மெகாவாட் அளவு மின்சாரம் உயர் மின்னழுத்த கம்பிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிக தாழ்வாக 20 அடிக்கும் குறைவான உயரத்தில் மின்னழுத்த கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் மாடிக்கு செல்வதையே தவிர்க்கின்றனர். மேலும் உயரமான கோபுரங்களை அமைக்க விமான நிலைய நிர்வாகம் ஆட்சேபனை தெரிவித்ததால் குறைவான உயரத்திலேயே மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள பல வீடுகள் அவ்வப்போது பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மின்காந்த கதிர்வீச்சிகளால் நீண்ட கால அடிப்படையில் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது எனவும் , இயற்கை சீற்றம் , மின்னழுத்த மாறுபாடு போன்ற காரணங்களால் அவ்வப்போது பாதிப்பு ஏற்படுபதாகவும் எனவே இதனை புதைவட தடமாக அமைத்து மின்னழுத்த கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதேபோல் பல இடங்களில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளை பணம் செலுத்தினால் மினசார வாரியம் புதைவட தடத்தில் கொண்டு செல்கின்றனர். குறிப்பாக அண்மையில் நூறடி சாலையில் பாலக்கட்டுமான பணிகளின் போது உயர் மின்னழுத்த கம்பிகள் புதைவடதடத்தில் பதித்து கொண்டு செல்ல மாநகராட்சி தரப்பில் கட்டணம் செலுத்தி மின்சார வாரியம் புதைவடத்தடமாக மாற்றியது. அதே போல் இந்த பகுதியிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்பில் இருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.