செப்டம்பர் மாத இறுதிக்குள்ளோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ சசிகலா விடுதலை ஆவார் என அவரது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் செப்டம்பர் மாத இறுதியில் வெளிவாருவார் என வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, “செப்டம்பர் மாத இறுதிக்குள் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வெளிவருவார் என நம்புகிறேன். இதை எனது ஆசையாக கூறவில்லை. சட்டப்படி, பெங்களூர் சிறையின் விதிப்படி கூறுகிறேன். சிறைத்துறை வழங்கும் சலுகைக்கப்படி அவர் கண்டிப்பாக செப்டம்பர் மாத இறுதிக்குள்ளோ அல்லது அக்டோபர் மாத முதல் வாரத்திலோ வெளிவருவார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சிறை நன்னடத்தை விதிகளின் படி கடந்த மார்ச் மாதமே சசிகலா விடுதலை பெற தகுதியாகிவிட்டார். கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக விடுதலை தள்ளிப்போய் இருக்கிறது. 300 கோடி சொத்து முடக்கம் குறித்து வருமானவரித்துறை சசிகலாவுக்கு அனுப்பிய நோட்டீஸ் அவருக்கு சென்று சேர்ந்ததா ? என்று தெரியவில்லை. சென்று சேர்ந்திருந்தால் சிறை சூப்பிரண்டு மூலமாக என்னை தொடர்பு கொள்வார். அதன்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். கடந்த 7 மாத காலமாக கொரோனா முடக்கத்தால் சசிகலாவை சந்திக்க முடியவில்லை” என்றார்.