தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வெளியிட்ட விளம்பரம்!

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வெளியிட்ட விளம்பரம்!

ச. முத்துகிருஷ்ணன்

ஒற்றைத் தலைமை சர்ச்சை அதிமுகவை உலுக்கி வரும் சூழலில், தமிழ் நாளேடுகள் சிலவற்றில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வெளியாகியுள்ள விளம்பரத்தில் பல பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதிமுகவின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இடையே மீண்டும் கடும் போட்டி நிலவும் நிலையில், நாளேடுகள் சிலவற்றில் அதிமுக விசுவாசிகள் என்ற பெயரில் “கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் ஓபிஎஸ்” என்ற தலைப்பில் விளம்பரம் வெளியாகியுள்ளது.

அதில் அதிமுகவில் தொடக்கத்தில் இருந்து வகித்த பதவிகள், அம்மாவின் விசுவாசி, ஒப்பற்ற நிதி நிர்வாகி, மண்ணின் மைந்தன், அரசியல் சூதுகளை மேற்கொள்ளாதவர், உழைப்பால் உயர்ந்தவர், விசுவாசத்தின் விலாசம், நவீனகால பரதன் என்ற தலைப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவின் “தொடர் தோல்விக்கான காரணங்கள்” என்ற தலைப்பின் கீழ் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரம் மிக்கவர்களாக இருப்பதற்காக ஒரு குழுவால் மிகப்பெரிய சூழ்ச்சிகள் கட்டவிழ்க்கப்பட்டிருப்பதாகவும் ஓபிஎஸ் விசுவாசிகளை பழிவாங்கும் நோக்கில் மிரட்டிப் பணிய வைத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் எதிர்க்கட்சியான பிறகு தேர்தலை சந்தித்ததால் அதிமுகவினர் பலர் கடனாளியாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட குழுவினர் தனிப்பட்ட அதிகாரம் செலுத்தியதால் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி தொண்டர்கள் வசம் கட்சி வந்ததாகவும் ஆனால் விலகிச் சென்றவர்கள் திரும்பி வந்தபோது ஏற்காமல், தான் மட்டும் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தால் கட்சியின் வாக்கு சதவிகிதமே சரிந்ததாக அமமுக மற்றும் சசிகலா பற்றியும் பெயர் குறிப்பிடாமல் கூறப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட சாதிகளை உள்ளடக்கிய 10.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சட்ட விதிகளை பின்பற்றாமல் அவசரமாக செயல்பட்ட காரணத்தால் தென் மாவட்டங்களில் அதிமுக தோல்வியடையச் செய்ய யார் காரணம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதாவால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்சை முன்னிலைப்படுத்தாமல் உதாசீனப்படுத்தியதே அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைமை சர்ச்சை அதிமுகவை உலுக்கி வரும் நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் தரப்பு மீது வெளியிட்டுள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கட்சியில் மேலும் அனலைக் கிளப்ப வாய்ப்புள்ளது.