இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி இன்று நடைபெற்று வரும் விமான சாகச நிகழ்வுக்காக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ஹெலிகாப்டர்கள் தொடங்கி, மிக், மிராஜ், தேஜஸ், ரஃபெல், சுகாய் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபடுகின்றன.
20 வகையான அணிகளை சேர்ந்த விமானிகள் வானை வர்ணஜாலமாக்கி வருகின்றனர். காலை 11.38 மணிக்கு சாகசங்கள் தொடங்கிய நிலையில், இதில் பங்கேற்கவுள்ள விமானக் குழுக்களுக்கு சேரா, சோழா, பல்லவா, காவிரி, காஞ்சி, தனுஷ், மெரினா என தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்கின்றன.
முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் மட்டும் 6500 காவலர்கள் மற்றும் 1500 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 8000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடற்பரப்பில் யாரும் இறங்காத வண்ணம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்காகவும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.