செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
பூந்தமல்லி ஒன்றிய அதிமுக சார்பில், அதிமுகவின் 53வது ஆண்டு விழா முன்னிட்டு பூந்தமல்லி அடுத்த அகரமேல் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மற்றும் அதிமுக கொள்கைபரப்பு துணை செயலாளர் நடிகை கௌதமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கௌதமி...
“மிகப்பெரிய பொறுப்பை கையில் ஒப்படைத்ததற்கு அதிமுக-விற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பே கட்சியில் நான் சேர்ந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஆனால், நினைவு வந்த காலத்திலிருந்து ஜெயலலிதா என் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இப்போது இளைஞர்கள் கையில் டாஸ்மாக்கும் போதைப் பொருளும் இருக்கிறது. எந்த திசையை திரும்பிப் பார்த்தாலும் இருட்டுதான் தெரிகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து மதத்தினரும் அவர்கள் மத பண்டிகைகளை சந்தோஷமாக கொண்டாடினார்கள். இப்போது அப்படி சொல்ல முடியாது” என்றார்.
தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த கௌதமி, “இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் மக்கள் பணிகளில் ஈடுபடலாம். அனைவரும் அரசியலுக்கு வர வேண்டிய தேவையும் இங்கே உள்ளது. அனைவருக்கும் வரவேற்பும் உள்ளது. இருப்பினும் விஜய் வந்த பிறகுதான் அவர் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.