கோடநாடு விவகாரம் தொடர்பாக பேரவைக்கு வெளியே ஓபிஎஸ் - இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். அவர்களைத் தொடர்ந்து பாஜக, பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை எனவும், எனவே அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தார். நீதிமன்ற அனுமதியுடன் தான் மீண்டும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். வெளிநடப்பு செய்த அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு வெளியே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.