தமிழ்நாடு

முத்துராமலிங்கத் தேவர் தங்க‌ கவசத்திற்கு உரிமை கோரிய ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்

முத்துராமலிங்கத் தேவர் தங்க‌ கவசத்திற்கு உரிமை கோரிய ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்

webteam

இரட்டை இலைச்சின்னம் கிடைத்ததையடுத்து, தேவர் தங்க கவசம் உள்ள மதுரை வங்கியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 13.5 கிலோ தங்கத்திலான கிரீடம் மற்றும் கவசம் ஆகியவை தேவர் சிலைக்கு அளிக்கப்பட்டது. இந்த கவசத்தை ஆண்டுதோறும் தேவர் குருபூஜை நாளில் அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட அறங்காவலர்கள் வங்கியில் இருந்து பெற்று விழாவிற்கு எடுத்து செல்வது வழக்கம், இந்த ஆண்டு அதிமுக அணிகள் பிரிந்திருந்ததால், கவசத்தையும் கிரீடத்தையும் இரண்டு அணிகளுக்கும் வழங்காமல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் வழங்கியது வங்கி நிர்வாகம்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு தேர்தல் ஆணையம் சின்னம், கொடியினை அதிகாரப்பூர்வமாக வழங்கியதை அடுத்து வங்கி கிளையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கையெழுத்திட்ட கடிதத்தை வங்கி மேலாளரிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பிற்கு சின்னம், கொடியினை வழங்கி உள்ளதால் இனிமேல் எந்தவொரு இடையூறும் இல்லை எனவும், கவசம் உள்ள வங்கி கணக்கை அதிமுகவின் பொருளாளர் தொடர்ந்து இயக்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.