அதிமுகவின் ஐடி பிரிவின் இணைச் செயலாளர் நிர்மல் குமார், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் திமுக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார் அளித்துள்ளார்.
அதில், “தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு மின்மாற்றிகள் வாங்கிய விவகாரத்தில் டென்டரில் செந்தில் பாலாஜி முறைகேடு செய்துள்ளார். குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை மின்மாற்றிகள் வாங்கிய விவகாரத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அரசு அதிகாரிகள் டென்டரில் முறைகேடு செய்து ஊழல் செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
இத்துடன், “25, 63, 100, 200, 250, 500 கிலோ வோல்டுகள் மின்மாற்றிகள் வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரில் தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டு மோசடி செய்துள்ளார் செந்தில் பாலாஜி. ரூ.1,182 கோடி மதிப்பிலான டெண்டரில் விதிகளை மீறி செயல்பட்டு சுமார் 397 கோடி ரூபாய் அளவில் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி உள்ளார்.
ஆறு வகையான கிலோ வோல்ட் மின்மாற்றிகள் சுமார் 45,800 எண்ணிக்கையில் வாங்கப்பெற்றதில் மோசடி நடந்தி உள்ளார்.
ஒவ்வொரு வகையான மின்மாற்றிகளுக்கும் அதிகப்படியான அளவில் விலை நிர்ணயித்து டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக டெண்டர் கிடைக்கும் வகையில் டெண்டர் தொகையை முன்கூட்டியே தெரிவித்து ஒரே மாதிரி விண்ணப்பித்து மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இவ்வாறாக ஆறு வகையான மின்மாற்றுகளுக்கான ஒப்பந்தத்தில் பல ஒப்பந்தங்கள் ஒரே மாதிரி முன்கூட்டியே தொகை தெரிவிக்கப்பட்டு , டெண்டரில் விண்ணப்பித்த நிறுவனங்கள் மோசடி செய்துள்ளன.
உதாரணமாக 500 கிலோ வோல்ட் மின்மாற்றி ரூ. 8,22,688 ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில், 12,26,300 ரூபாய் என டெண்டர் அதிக விலைக்கு கொடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் இன்னொரு மின் மாற்றிகள் டெண்டர் விடப்பட்ட விவகாரத்தில் 34 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது.
இப்படி, ஒவ்வொரு வகை மின்மாற்றியிலும் அதிகப்படியான விலை நிர்ணயித்து மொத்தமாக 397 கோடி அளவில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மின்மாற்றிகளை வாங்க முடிவு செய்ததில் தலைவர் அல்லது தலைமை கட்டுப்பாட்டாளர் அல்லது கண்காணிப்பு பொறியாளர் மற்றும் முடிவு செய்திருக்க முடியாது. ஆகவே அதிகாரிகள் மட்டுமல்லாது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார் நிர்மல் குமார். இந்த புகாரானது தபால் மூலம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.