கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தியதாக 150 க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை 49 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இச்சூழலில் இன்று காலையில் அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்றனர். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த விகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து, பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டார். மேலும், பதவி விலகுங்கள் ஸ்டாலின் என்ற எழுதப்பட்ட காகிதத்தை காண்பித்து எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். மேலும், சட்டப்பேரவையை ஒத்திவைத்து உடனடியாக விவாதிக்கக் கோரி அதிமுகவுடன் பாமக, பாஜக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். குறிப்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவரான அதிமுக ஆர்.பி.உதயகுமாரை, அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் செய்தியாளரைகளை சந்தித்து தனது கண்டனத்தை பதிவு செய்தார். அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 50 என்று எங்களுக்கு தெரியவந்துள்ளது (அதிகாரபூர்வ தரவு 49). மேலும் புதுச்சேரி மருத்துவமனையிலும், சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் 96பேர் விஷச்சாராயத்தினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுவும், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், சேலத்தில் சிகிச்சை பெற்றுவரும் பலருக்கு கண் தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனை சட்டமன்றத்தில் பேசவேண்டும் என பேரவை தலைவரிடத்தில் அனுமதி கேட்டோம். ஆனால், பேரவை தலைவர் அனுமதி தர மறுத்துவிட்டார். இது நெஞ்சை பதறவைக்கும், நாட்டை உலுக்கியுள்ள சம்பவம். இதனை பற்றி பேசுவதற்கு கூட வாய்ப்பு அளிக்கவில்லை என்றால், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லை என்று ஆகிவிடும். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என்ற முறையில், அரசினுடைய கவனத்திற்கு கொண்டுவருவது எங்களின் தலையாய உரிமை.
ஆகவே, நாங்கள் தொடர்ந்து இதற்கு அனுமதி கேட்டோம். ஆனால், கிடைக்கவில்லை. ஏழை, எளிய, ஆதி திராவிட மக்கள் இந்த கள்ளச்சாரயத்தால் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சையும் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் சபாநாயகர் நடு நிலைமையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதை செய்யாதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இதற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும் அனுமதி அளிக்கப்படவில்லை எங்களை வெளியேற்றிவிட்டனர். மேலும், எதிர்க்கட்சி துணைத்தலைவரான உதயகுமார் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார். ஆனால் அவரை கைது செய்யும் அளவிற்கு அடக்கு முறைய பார்க்கிறோம். ஒரு ஜனநாயக படுகொலை, நாட்டு மக்களின் உயிர் போய்க்கொண்டுள்ளது... இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த ஆட்சி ஹிட்லர் ஆட்சி போல சர்வாதிகார ஆட்சியாக பார்க்கிறோம். முதலமைச்சர் பலமுறை போதை தடுப்பு மற்றும் கள்ளச்சாரய ஒழிப்பு குறித்து உயர் காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துகிறார். இருப்பினும், இதனை தடுக்க முடியவில்லை. காரணம் என்னவென்றால், இது திறமையற்ற அரசாங்கம், ஆள்பவர் பொம்மை முதலமைச்சர்.
மேலும், கள்ளக்குறிச்சியில் காவல்நிலையத்திலிருந்து 200 மிட்டர் தொலைவில்தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக நடமாடும் அப்பகுதியிலேயே தொடர்ந்து 3 ஆண்டுகள் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது என்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி உள்ளது. அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? ஆக, இப்படி ஆட்சி நடக்கிறது என்றால், முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும். இப்படிப்பட்ட முதல்வர் எதற்கு?
இன்னும், எத்தனை பேர் உயிரிழப்பார்கள் என தெரியவில்லை. பல மருத்துவமனைகளில் வெளிப்படைதன்மை இல்லை, முறையான சிகிச்சை இல்லை. போதிய மருந்துகள் இல்லை. ஆனால், அமைச்சர் ‘எல்லாம் இருக்கிறது’ என்று பொய் கூறுகிறார்.
கடந்த 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சி பகுதியில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் இறப்பிற்கான காரணமாக அம்மாவட்ட ஆட்சியர் ‘ஒருவர் வயிற்று வலி, வயிற்றுபோக்கால் உயிரிழந்தார். மற்றொருவர் வயது முதிர்வு காரணமாகவும், வேறோருவர் வலிப்பு நோயால் இறந்தார்’ என கூறுகிறார்.
ஆனால், இது எதுவும் உண்மை இல்லை என அப்பகுதியில் உள்ள பெண்மணி ஒருவர் தெரிவிக்கிறார். ஆக, உண்மை செய்தியை அப்பொழுதே கலெக்டர் வெளியிட்டிருந்தால், உடனடியாக இது கண்டறியப்பட்டிருக்கும். இந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும். ஆக இவர் அரசாங்கத்திற்கு துணையாக செயல்படுகிறார்.
மேலும், இதற்கு காரணமாக இருந்த மற்ற அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூழலில் , அரசாங்கத்திற்கு துணையாக இருந்த கலெக்டர் மட்டும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், ஆளுங்கட்சி இதில் முழுவதுமாக தொடர்பு கொண்டுள்ளது என்று தெரியவருகிறது. மேலும், இதில் கவுன்சிலர்கள் சிலருக்கும் தொடர்பு உண்டு என அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவை சேர்ந்தவர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்ற பட்டதை தொடர்ந்து தற்போது பாமக, பாஜக உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.