எடப்பாடி பழனிசாமி புதிய தலைமுறை
தமிழ்நாடு

கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக நடப்பு கூட்டத்தொடர் முழுவதும், அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில் 60 பேர் உயிரிழந்த நிலையில், இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்காரணமாக, சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

அதிமுக வெளிநடப்பு

அதில் நேற்றைய தினமும் அதிமுகவினர் அமளியில் ஈடுப்பட்டதால், நேற்று ஒருநாள் முழுவதும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், இன்றும் அதிமுகவினர் அமளியை தொடர்ந்ததால் கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்து சபாநயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு முக்கியமான சம்பவம் தொடர்பாக விவரிக்க வேண்டும் என்றால், முன்னதாகவே, ஒத்திவைப்பு தீர்மானத்தை சம்மந்தப்பட்டவர்கள் சபாநாயகர் இடத்தில் கொடுக்கவேண்டும். அதிமுகவினரை பொறுத்தவரை இன்று காலையில் அதிமுகவின் கொடரா எஸ்.பி வேலுமணியும், எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமாரும் சபாநாயகர் அப்பாவுவை நேரடியாக சந்தித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை கொடுத்துள்ளனர்.

ஆனால், அதன்பிறகும் கேள்வி நேரத்தை ஒத்திவைக்காமல், சட்டப்பேரவையை தொடர்ந்ததால், அதிமுகவினர் சட்டமன்றத்தின் உள்ளேயே அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பேசிய சாபாநயகர், ”சட்டமன்றம் தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் பிறகும் அதிமுகவினர் அமளியை தொடரவே, அவர்களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார் சபாநாயகர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பேரவை விதி 56-ன் படி அனுமதி கேட்டு, சபாநாயகரை இன்று காலை அதிமுகவின் கொரடா மற்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் சந்தித்தனர். அப்போது ஒத்திவைப்பு தீர்மானத்தை கொடுத்துள்ளனர். நேற்றைய தினமே, இதை பற்றி பேசிய பேரவைத் தலைவர், ‘அதிமுகவினர் விதியின்படி செயல்பட்டால் சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படும்’ என்ற வார்த்தையை கூறியிருக்கிறார். மேலும், நாங்கள் எந்த விதியையும் பின்பற்றாமல் பேசுகிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இன்றைய தினம் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த மக்களின் உயிர்சார்ந்த பிரச்னையை 56 விதியின் கீழ் எடுத்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கேட்டோம். ஆனால், மறுத்து விட்டார்கள். விதியை பின்பற்றி பேசுங்கள் என்று குறிப்பிடுகிறர்கள், அப்படி விதியை பின்பற்றி பேச முற்பட்டாலும் மறுக்கிறார்கள். எங்களுக்கு பேசுவதற்கு அனுமதியே கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.