முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் pt
தமிழ்நாடு

”கருணாநிதி பெயரை வைத்தால் மட்டும் போதுமா?”- மருத்துவர் மீதான தாக்குதல் குறித்து ஜெயக்குமார் காட்டம்!

சென்னையில் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினரொருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மருத்துவரை நேரில் சந்தித்தனர். அப்போது திமுகஆட்சியை விமர்சித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

Rishan Vengai

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதளப்பக்கத்தில் “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று பதிவிட்டார்.

இதற்கிடையே சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று விளக்கமளித்திருந்தார்.

நேரில் சென்று பார்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள்..

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கே நேரில் சென்று பார்வையிட்டனர். மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுக ஆட்சியை விமர்சித்து பேசினர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், மருத்துவமனைக்கு கருணாநிதியின் பெயரை வைத்தால் மட்டும் போதாது, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டியதும் அரசின் கடுமை என்று விமர்சித்தார். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 100% டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருந்தனர். ஆனால் திமுக ஆட்சியில் வெறும் 40% டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதனாலேயே சிகிச்சை தாமதமாகின்றது என்ற விமர்சனத்தை முன்வைத்தார.