minister Udayanithi pt desk
தமிழ்நாடு

அதிமுகவில் இருக்கும் அணிகளை வைத்து ஐபிஎல் நடத்தலாம் - அமைச்சர் உதயநிதி கிண்டல்

Kaleel Rahman

ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். திறந்தவெளி வாகனத்தில் வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து வாக்காளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்களை நேரில் பார்த்து நன்றி தெரிவிக்க வந்திருக்கிறேன். ஈரோடு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளீர்கள். இந்த 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உங்களின் வெற்றி.

meeting

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் அறிவித்த 260 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை திறப்பு வாழ்விற்கு ஜனாதிபதியை அழைக்க தமிழக முதல்வர் டெல்லி சென்றிருந்தார். நான் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமரிடம் கேட்டு வந்தேன். ஆனால், எடப்பாடி கோஷ்டி கட்சி பஞ்சாயத்திற்காக டெல்லி சென்றிருந்தார்கள். டெல்லி செல்வதற்கு முன்பு அண்ணாமலை குறித்து கேள்வி கேட்காதீர்கள் என்றவர், டெல்லி சந்திப்பிற்குப் பிறகு அண்ணாமலையை கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். வெட்கம் மானம் சூடு சொரணை உள்ளதா என விமர்சித்தார்.

அதிமுகவில் எத்தனை அணி உள்ளது என்றே தெரியவில்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன், சசிகலா, ஜெ.தீபா என இத்தனை அணி உள்ள நிலையில், அதிமுகவிற்கு தனி ஐபிஎல் நடத்தலாம் அந்த அளவிற்கு அதிமுக-விற்குள் அணி உள்ளது. தேர்தலுக்கு தேர்தல் மக்களை சந்திப்பது திமுக கிடையாது. நாங்கள் சொன்னதை காப்பாற்றி இருப்பதால் தான் வெற்றியைத் தந்துள்ளீர்கள். அதிமுக தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் மீண்டும் அடுத்த தேர்தலுக்கு தான் வருவார்கள். ஆனால், திமுக மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துவதில் இருந்து மாநில உரிமைகளை மீட்டெடுப்பது வரை எல்லாமுமாக இருக்கின்ற கட்சி.

Udayanithi speech

திமுக தலைவர் ஸ்டாலின் கை காட்டுபவர் தான் அடுத்த பிரதமராக கூடிய நிலை உள்ளது. ராகுல்காந்தி, மோடியின் நண்பர் அதானி எப்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்தார் என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி பதவியை பறித்துவிட்டனர். இரண்டு ஆண்டுகளில் முதல்வர் 80 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றிய நிலையில், விரைவில் 100 சதவீதம் நிறைவேற்றுவார். திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று வெற்றியைப் பெற்றது போல், கடந்த சட்டமன்ற தேர்தலில் பாசிச அடிமைகளை வீட்டிற்கு அனுப்பியது போல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவை வீட்டிற்கு அனுப்ப தயாராக வேண்டும் என்று பேசினார்.