தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்துமாறு அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
பருவ மழை பொய்த்த நிலையில், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வறட்சி மற்றும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் சென்னை உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால், தலைநகரமான சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாக பூஜை நடத்துமாறு, அதிமுகவின் 53 மாவட்டச் செயலாளர்களுக்கும் அதிமுக தலைமை அறிவுரை வழங்கியுள்ளது. இந்தப் பூஜைகளில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி, சென்னையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலை 8.30 மணி முதல் யாக பூஜை நடத்துவதற்கு அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோயில்களில் நாளை நடைபெறும் யாகங்களில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடிநீர் பிரச்சனைக்காக நாளை மாவட்டம் தோறும் போராட்டம் நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அதிமுக யாகம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.