தமிழ்நாடு

இதுவரை பொறுமையாக இருந்தோம்; நாளை வேறுவிதமாக போராடுவோம்- சசிகலா

இதுவரை பொறுமையாக இருந்தோம்; நாளை வேறுவிதமாக போராடுவோம்- சசிகலா

Rasus

அதிமுக எம்எல்ஏ-க்களை சந்தித்த பின் போயஸ் தோட்டம் திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுவரை பொறுமையாக இருந்ததாகவும், நாளை வேறுவிதமாக போராடுவோம் எனவும் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் திடீரென முதலமைச்சர் பன்னீர்செல்வம் பக்கம் சென்றதால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, கட்சியின் பிற எம்எல்ஏக்களை சந்திக்க தீர்மானித்தார்.

இதற்காக பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவர், பிற்பகல் 3.45 மணியளவில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் நட்சத்திர விடுதிக்குச் சென்றார். அங்கு 4 நாட்களாக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ-க்களை சந்திக்க பிரத்யேக அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களிடம் சிறிது நேரம் உரையாற்றிய சசிகலா, பின்னர் எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்தித்தும் ஆலோசனை நடத்தினார். 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.

இரவு 7 மணியளவில் கூவத்தூரில் இருந்து சசிகலா புறப்பட்டார். பின்னர், போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்தடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதற்கு ஆளுநர் தாமதம் செய்வதை கட்சியைப் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கையாகவே கருதுவதாக குற்றம்சாட்டினார். மேலும் இதுவரை பொறுமையாக இருந்ததாகவும், நாளை வேறுவிதமாக போராடுவோம் எனவும் தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் மனஉறுதியுடன் இருப்பதாகவும் சசிகலா கூறினார்.