EPS pt desk
தமிழ்நாடு

தேர்தல் 2024 | “கருணாநிதி, ஸ்டாலின் போல முதலமைச்சராக உதயநிதியா? அது நடக்காது” – எடப்பாடி பழனிசாமி

“I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சிகள் முரண்பட்ட கொள்கையுடைய கட்சிகள். அவை எப்படி ஒன்று சேர முடியும்? அதனால் I.N.D.I.A. கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியாது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

webteam

செய்தியாளர்: எஸ்.இரவி

ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்...

தேர்தல் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

திட்டத்தை அறிவித்து குழு மட்டும் போடும் ஒரே அரசு திமுக அரசு:

“நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். ஸ்டாலின் ஒரு திட்டத்தை அறிவித்ததுடன் அதற்கு ஒரு குழு போட்டு விடுவார். அப்படி 52 குழுக்களை போட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவிலேயே திரு ஸ்டாலின் அரசுதான். ஆதனால் அது திராவிட மாடல் ஆட்சி அல்ல. குழு போட்ட அரசு என்று மக்கள் பேசுகிறார்கள். எல்லாத் துறைகளிலும் ஊழல். ஊழலற்ற துறையே கிடையாது. ஊழலுக்குச் சொந்தமான கட்சி திமுக.

திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறியுள்ளது:

கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? கருணாநிதி முதலமைச்சராக இருப்பார். பின் ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பார். அடுத்து உதயநிதி அந்தப் பதவிக்கு முயற்சி செய்கிறார். அது நடக்காது. எல்லா கட்சியும் கட்சியாக மாறி இருக்கிறது. ஆனால், திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறியுள்ளது. ஏனெனில் கம்பெனியில்தான் அப்பாவிற்கு பிறகு மகன் வருவான். அப்படியொரு கார்ப்பரேட் கம்பெனியாக இருக்கின்ற ஒரு கட்சி திமுக. இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி அதிமுகதான். ஒரு கிளை செயலாளர், பொதுச் செயலாளராக வளரக்கூடிய ஒரே கட்சியும் அதிமுகதான்.

Public meeting

மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு ஸ்டாலின் துடிக்கிறார்:

மூன்றாண்டு காலம் தமிழ்நாட்டில் ஒன்றுமே செய்யாத ஸ்டாலின், மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு இப்போது துடிக்கிறார். முரண்பாடான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் கூட்டணியான I.N.D.I.A. கூட்டணி, ஆட்சிக்கு வருவது கேள்விக்குறியே. ஸ்டாலின் காண்பது பகல் கனவு.

உதயநிதி ஸ்டாலின் எந்த இடத்திற்குச் சென்றாலும் ஒரு செங்கலை கையில் எடுத்துள்ளார். எதுக்கு தூக்கிட்டு போறார் என யாருக்கும் தெரியவில்லை. இந்த கல்லை தூக்கிக் கொண்டு போய் காட்டி மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? உங்களுக்கு விளம்பரம் வேண்டும். அதற்காக ஒற்றைச் செங்கலை காட்டிக் கொண்டிருக்கிறார்” என்று பேசினார்.