jayakumar pt desk
தமிழ்நாடு

"ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் பாஜகவை தாஜா செய்கிறார் ஸ்டாலின்" - ஜெயக்குமார் விமர்சனம்!

webteam

செய்தியாளர்: சந்தான குமார்

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக செயற்குழு கூட்டம் முடிந்தபின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக சட்ட விதிப்படி ஆறு மாதத்துக்கு ஒரு முறை செயற்குழு கூட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்குழு கூட்டப்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

cm mk stalin, pm modi

அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு இருட்டடிப்புச் செய்து வருகிறது. அம்மா மருந்தகத்தை மூடிவிட்டு தற்போது முதல்வர் மருந்தகம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெயரை மாற்றி லேபிள் ஒட்டும் வேலையை தான் திமுக அரசு செய்கிறது, இந்த அரசுக்கு சுய புத்தி இல்லை. மின் கட்டண உயர்வு காரணமாக பல தொழிற்சாலைகள் மூடும் நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழலில் வெளி நாடுகளில் முதலீடு ஈர்க்க முதலமைச்சர் செல்கிறார். முதலமைச்சர் வெளிநாடு பயணங்கள் மூலமும், திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது, எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டோம். இதுவரை வெளியிடவில்லை.

cm stalin governor ravi

ஆளுநர் தேநீர் விருந்து, சுதந்திர தினத்தன்று மரபுப்படி நடத்துவது. அதனால் அதிமுக பங்கேற்றது. திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், காலையில் திமுக புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு அரசு சார்பில் கலந்து கொள்வோம் என அறிவிக்கிறார்கள். ஸ்டாலின் வேறு, திமுக வேறா. ஏன் எட்டு அமைச்சர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு தேநீர் விருந்துக்கு சென்றார்கள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்த அரசு, ஏன் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதன் மூலம் திமுக பாஜக இடையே ரகசிய கள்ள உறவு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. முதலமைச்சர் வெளிநாடு செல்லும் நேரத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் தான் தேநீர் விருந்துக்கு செல்வது, ராஜ்நாத் சிங்கை அழைப்பது என பாஜகவுக்கு கூஜா தூக்கும் அரசாக திமுக அரசு உள்ளது” என்றார்.