jayakumar pt desk
தமிழ்நாடு

”ஆட்சி போய்விடும் என்ற அச்சத்தில் செந்தில் பாலாஜியை ஸ்டாலின் நீக்காமல் வைத்துள்ளார்” - ஜெயக்குமார்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், ஆட்சி போய்விடும் என்ற அச்சத்தில்தான் முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை நீக்காமல் வைத்துள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

webteam

மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மூத்த நிர்வாகி பொன்னையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், செம்மலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

eps

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது...

“மதுரை எழுச்சி மாநாட்டில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக திமுக ஆட்சியின் அவல நிலைகள் குறித்தும், ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும், திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும் மக்களுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

”செந்தில் பாலாஜிக்காக சிறையை வசந்த மாளிகை போல் மாற்றியுள்ளனர்”

சிறையில் செந்தில் பாலாஜிக்கு ஏ1 வசதி மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அவருக்கு சிறை விதிகளை மீறி வசதிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக சிறையில் அதிகாரிகள் சென்று அவருக்கு சல்யூட் அடித்து வருகிறார்கள். இதை பார்க்கும்போது ஜெயிலை அவருக்கு வசந்த மாளிகை போல உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். சிறை விதிகளை மீறி செந்தில் பாலாஜிக்கு வசதி கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால், அமலாக்கத்துறை இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SenthilBalaji

சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜியை பாதுகாக்க காரணம் என்ன? அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி ஆளுநரிடம் அதிமுக சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கும் தைரியம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கிறதா? செந்தில் பாலாஜியை நீக்கினால் ஆட்சி போய்விடும். ஆட்சி போய்விடும் என்ற பயத்தின் காரணமாக தான் இன்னும் செந்தில் பாலாஜியை நீக்காமல் வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

”2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும்”

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கூறியது போல அனைத்து தாய்மார்களுக்கும் உரிமைத் தொகை கொடுக்க வேண்டும். 2 கோடி 15 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு அறிவித்தபடி மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்காமல், ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு 1008 விதிகளை வைப்பது இந்த அரசாங்கம் தான். தகுதி உள்ள குடும்பத் தலைவிகள் பெற முடியாதவர்கள் நிச்சயமாக அவர்களது கோபம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

manipur

”மணிப்பூர் வன்கொடுமை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல்”

உலக நாடுகளில் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு ஈனத்தனமான செயல் மணிப்பூரில் நடைபெற்றுள்ளது. இதில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சுமுகமாக பிரச்னையை தீர்க்க வேண்டும். மேலும் அம்மாநில அரசு காலம் தாழ்த்தாமல் குற்றம் செய்தவர்களுக்கு சீக்கிரமாக தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

”பொன்முடியிடம் அமலாக்கத்துறை கைப்பற்றியது 1 சதவீதம் தான்!”

அமைச்சர் பொன்முடி சேர்த்து வைத்துள்ளதில் ஒரு சதவீதம் தான் அமலாக்கத்துறை சோதனையில் கிடைத்துள்ளது. இன்னும் அவருக்கு 99 சதவீத சொத்துக்கள் உள்ளது. சொத்து சேர்த்துள்ள அனைவரையும் அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் அவரது அப்பாவின் வழியையே காவிரி விவகாரத்தில் கடைபிடிக்கிறார். திமுக ஆட்சி காலத்தில்தான் மூன்று அணைகள் கர்நாடகாவில் கட்டப்பட்டது. இவர்களது நடவடிக்கையால் தான் தமிழகமே தண்ணி இல்லாமல் வறண்ட காடாக மாறியுள்ளது” என்றார்.