தமிழ்நாடு

“அதிமுக-தேமுதிக உணர்வுப் பூர்வமான கூட்டணி” - ஓ.பன்னீர்செல்வம்

“அதிமுக-தேமுதிக உணர்வுப் பூர்வமான கூட்டணி” - ஓ.பன்னீர்செல்வம்

webteam

அதிமுக-தேமுதிக கூட்டணி உணர்வுப்பூர்வமான கூட்டணி என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் தேமுதிக பங்கேற்பதில் இழுபறி நிலவி வந்தது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட்டணி உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று கூட்டணி உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் சில மணி நேரங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச்செயலாலர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கூட்டணிக்காக ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்திற்குப் பிறகு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஒப்பந்தத்தை அறிவித்த பன்னீர்செல்வம், “நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், தேமுதிகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். ஒப்பந்தப்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கும்.

அதிமுக வெற்றிக்கூட்டணி இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் ஆலோசனைக்குப் பின்னர் அறிவிக்கப்படும். தேர்தல் இடைத்தேர்தல் எப்போதும் நடந்தாலும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தரும். தமாக விவகாரத்தில் கூடிய விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இது உணர்வால் இணைந்த கூட்டணி” என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் சரமாரியாக எழுப்பிய கேள்விக்கு நகைச்சுவயாக பதிலளித்த பன்னீர்செல்வம், வடிவேலும் காமெடியான “ரூம் போட்டு யோசிப்பிங்களா” என்ற வசனத்தை கூறினார்.