உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவது குறித்து அந்தந்த மாவட்ட அதிமுக செயலாளர்களே முடிவெடுப்பார்கள் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படாத நிலையில், தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யும் முடிவை அந்தந்த அதிமுக மாவட்டச் செயலர்களே மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சதவிகித அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் கிடையாது எனவும், கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் பேசி இடங்களை பிரித்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இடம் பிரிப்பதில் எந்தவித பிரச்னையும் ஏற்படாமல் தவிர்க்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.