தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சியைப் போல பெரம்பலூரிலும் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலிய கொடூர வழக்கை அதிமுக அரசு பொறுப்பற்ற முறையில் கையாண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசு எவ்வித அக்கறையோ ஆர்வமோ காட்டாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் தோல்வி தற்போது பெரம்பலூரிலும் எதிரொலித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ.யிடம் விரைந்து ஒப்படைக்கவும், பெரம்பலூர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, பொள்ளாச்சியில் பல பெண்கள் ஆபாசமாக வீடியோ எடுக்கப்பட்டு, அதன்மூலம் மிரட்டப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.