செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தையே களோபரம் ஆக்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தது அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதையடுத்து அ.தி.மு.கவினரை அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இதனால் அதிமுக பா.ஜ.க இடையே கருத்து மோதல் தொடர்ந்து நீடித்து வந்தது.
இந்நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதற்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்தனர். இதனையடுத்து அமைச்சர் உதயதிநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அண்ணா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது அ.தி.மு.கவினரிடையே பெரும் சலசலப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அண்ணாமலையின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தது அரசியல் களத்தை பரபரப்பாகியது.
'அதிமுக' எனும் சிங்க கூட்டத்தை பார்த்து சிறு நரி ஊளையிடுவதா? என கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை இதுதான் கட்சியின் நிலைப்பாடு எனக் கூறி அரசியல் களத்தை பரபரப்பாக்கினார். இந்தநிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு மற்றும் மாவட்ட செயாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வது தொடர்பாக ஏகமனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பா.ஜ.கவுடன் கூட்டணி வேண்டாம் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். பாஜகவை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும் பின்னாளில் எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பேசிய (அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியேவரவில்லை) பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'அ.தி.மு.கவிற்கு என்ன நடந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன்' என கூறியதாக தெரியவருகிறது. பொதுவாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் என யார் ஊழல் செய்தாலும் அவர்களை கைது செய்ய கட்டாயம் ஆளுநரின் ஒப்புதல் வேண்டும். அதேபோல் ஒருசில வழக்குகளுக்கு ஆளுநரின் அனுமதி அவசியம். இந்தநிலையில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பான முக்கிய வழக்குகளில் கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. அதே போல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக காவல் துறையினருக்கு அனுமதி அளிக்காமல் இருந்து வருகிறார்.
இதில், தமிழகத்தையே உலுக்கிய முக்கிய வழக்கான கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் இதை எல்லாம் செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். மேலும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகளும் உள்ளன. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மீது கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மற்றும் டெண்டர் முறைகேடு தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் தமிழக காவல்துறையால் தொடரப்பட்ட வழக்காகும். அதே போல முன்னாள் அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட டெண்டர் முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை வழக்குகளும் ,அமலாக்கத் துறையால் தொடரப்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அமலாக்கத் துறையால் பதியப்பட்ட வழக்குகள் எப்போது வேண்டுமானாலும் வேகமெடுக்கலாம் என கூறப்படுகிறது.
ஆளுநர் நினைத்தால் தமிழக அரசின் வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்து நடவடிக்கை எடுக்க முடியும் இல்லையென்றால் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி துணிச்சலாக பா.ஜ.கவுடனான கூட்டணி முறிவு என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நெருக்கடிகள் வரும் என்பதை தெரிந்து கொண்டு தான் எடப்பாடி இந்த முடிவை அறிவித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 'அ.தி.மு.கவிற்கு என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்' என எடப்பாடி பழனிசாமி கூறியது குறிப்பிடத்தக்கது.