இன்று புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய தலைவர்கள் பரபரப்பு குற்றசாட்டுகளைக்கூறி கட்சியிலிருந்து விலகினார்கள். இதனால், ’கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன்’ என்று கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியினருடன் நடந்த இணையவழி கலந்துரையாடலில் பேசியவர், “கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்” என்று விழிப்புணர்வூட்டியவர், ’விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும்’ எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதோடு, அண்மையில் முக்கிய நிர்வாகிகள் விலகிய நிலையில், அரசியல் ஆலோசகர்களாக பழ.கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி, துணைத் தலைவர்களாக மவுரியா, தங்கவேலு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மவுரியா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதால், பொதுச் செயலாளர் பொறுப்பு கமல்ஹாசனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.