தமிழ்நாடு

தமிழகத்துக்கு கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் !

தமிழகத்துக்கு கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் !

jagadeesh

தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

கொரோனா பொதுமுடக்க தளர்வுகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ரயில் சேவை செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஏற்கெனவே 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து நெல்லைக்கும்‌, மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கும் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இருமார்க்கங்களிலும் தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதேபோல், எழும்பூர் - மதுரை இடையே இரு மார்க்கங்களில் தேஜஸ் ரயில் வியாழன் தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எழும்பூர் - ராமேஸ்வரம் இடையேயும் 2ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் வழியாக கொல்லத்திற்கும், கொல்லத்தில் இருந்து எழும்பூருக்கும் ரயில் இயக்கப்படவுள்ளது. இதேபோன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழாவுக்கும், காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ,நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.