Cool lip case - madurai high court pt web
தமிழ்நாடு

”மாணவர்களை கூல் லிப் போதைப் பொருள் அடிமையாக்கி வருகிறது” - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தர்வு

PT WEB

"கூல் லிப்" உள்ளிட்ட போதைப் பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவிப்பது தொடர்பான விவகாரத்தில் ஹரியானா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 3 நிறுவனங்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

சமீபத்தில் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்த நீதிபதி, "தமிழகத்தில்" கூலிப்" எனும் போதைப் பொருளை விற்பனை செய்த வழக்கில் ஜாமின் கோரி பல வழக்குகள் வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் "கூலிப்" உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஜிஎஸ்டி வரியே வசூலிக்கப்படுகிறது.

சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க இது போன்ற போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததே காரணம். இளம் தலைமுறையினர் சிந்திக்கும் திறன் முற்றிலுமாக மறைந்து வருகிறது.

நமது குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? "கூலிப்" போன்ற போதை பொருள் விற்பனை செய்தால் கைது செய்கிறோம். அவர்கள் ஜாமினில் வெளிவந்து விடுகின்றனர். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் செயல்பட தொடங்கி விடுகிறது.

போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு குழந்தை உளவியல் அறிந்து கவுன்சிலிங் வழங்குவது, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என முடிவு செய்ய வேண்டும்.

மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது. தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் "கூலிப்" எனும் போதைப்பொருட்களை பயன்படுத்துவோர் இருப்பதாகவே தெரிகிறது. ஆகவே "கூலிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார்.

அது தொடர்பான உத்தரவு நகல் வெளியாகியுள்ள நிலையில், 1.ஹரியானா மாநிலம், சோனேபேட் பகுதியைச் சேர்ந்த தேஜ்ராம் தரம்பால் பிரைவேட் லிமிடெட்

2.கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்த விதரத் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்

3.கர்நாடக மாநிலம் தும்குரு அந்தரசனஹள்ளி இண்டஸ்ட்ரியல் ஏரியாவை சேர்ந்த வி.ஆர்.ஜி ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்ப்பதாகவும் இந்த நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் போது அவர்களது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.