விஜயலட்சுமி - சீமான் pt web
தமிழ்நாடு

“வீரலட்சுமியின் கொடுமை தாங்க முடியவில்லை; சீமான் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன்” - நடிகை விஜயலட்சுமி!

”சீமான் மீது ஆகஸ்ட் 28ஆம் தேதி புகார் அளித்திருந்தேன். புகார் அளிக்கப்பட்டதில் இருந்து, நான் வீரலட்சுமியால் கடுமையான மன மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகிறேன்” என்றார் நடிகை விஜயலட்சுமி.

PT WEB

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்து சீமான் ஏமாற்றிவிட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி போலீசார் இருமுறை சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், சீமான் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

vijayalakshmi seeman

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை விஜயலட்சுமி, “இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூர் செல்கிறேன். யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. சீமானிடம் பேசினேன் வழக்கை வாபஸ் பெற்று விட்டேன். வழக்கை தொடர்வது, சென்னைக்கு வருவது இனி இல்லை. இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி இல்லை. போலீசாரின் நடவடிக்கை மெதுவாக இருந்தது. 20 சம்மன் அனுப்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது என சீமான் கூறிவிட்டார். இரண்டு வாரமாக வீட்டு காவலில் இருந்தது போல் இருந்தேன் செல்போன் கூட இல்லை.

சீமானுக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது. அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனது தோல்வியை ஒத்துக் கொண்டு செல்கிறேன். திமுக விளையாட்டு எனக்குத் தெரியாது. சீமான் ஃபுல் பவராக உள்ளார். சீமானை தற்போது ஒன்றும் செய்ய முடியாது நான் சீமானிடம் காசு வாங்கவில்லை. சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்து கொண்டே இருக்கட்டும். சீமானை விசாரணைக்கு கொண்டு வருவது முடியவில்லை. அதனால் அவர் பவராக உள்ளார்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜயலட்சுமி அளித்திருந்த வாபஸ் கடிதம் வெளியாகியுள்ளது. அதில், “சீமான் மீது ஆகஸ்ட் 28ஆம் தேதி புகார் அளித்திருந்தேன். புகார் அளிக்கப்பட்டதில் இருந்து, நான் வீரலட்சுமியால் கடுமையான மன மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகிறேன். சுய விருப்பத்தின் பேரில் சீமான் மீது நான் கொடுத்த புகாரை வாபஸ் பெற விரும்புகிறேன். இது யாராலும் கட்டாயப்படுத்தப்படவில்லை. நான் பெங்களூர் திரும்ப விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.