நடிகை சாய்பல்லவியை சுட்டும் உருவக்கேலி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய தலைமுறை நியூஸ் 360 நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பார்க்கலாம்.
பொது சமூகத்தின் பார்வையில் பதியப்பட்டிக்கும் அழகிற்கான இலக்கணங்கள் தகர்க்கப்பட, தவிர்க்கப்படவேண்டிவை. காலம், கலாசாரம், இடம், சூழல் என அழகிற்கான வரையறைகள் மாற்றமடைந்து கொண்டே இருந்தாலும், அந்த எதிர்பார்ப்புகளுக்குள் அடங்காமல் இருப்பவர்களை நோக்கிய கேலியும், கிண்டலும், அவமானங்களும் மட்டும் மாறாமல் அப்படியேதான் இருக்கின்றன.
அந்த வன்மசுழலில் தற்போது சிக்கியிருப்பவர் திரைப்பட நடிகை சாய் பல்லவி. ஃபேஸ்புக்கில் சாய் பல்லவியை பற்றிய பதிவை எழுதியிருக்கும் ஒரு நபர், அவர் அப்படி ஒன்றும் எல்லோரும் கொண்டாடுவது போல அழகல்ல எனத் தொடங்கி, அந்த பதிவில் சாய்பல்லவியின் முக வடிவை குறித்து எதிர்மறையாக விமர்சனம் செய்திருக்கிறார். அங்கிருந்து தொடங்கி சாய்பல்லவியின் முகவடிவை குறித்த கேலி பதிவுகளையும், அந்த பதிவுகளுக்கு மறுப்புகூறும் விமர்சனங்களையும் ஃபேஸ்புக்கில் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.
சாய் பல்லவியின் திரைப்பட அறிமுகமே இந்த பொதுவிதிகளுக்கு அப்பாற்பட்டதுதான், முகப்பருக்களோடு கதாநாயகியாக திரையில் தோன்றி ரசிக்கவைத்தவர். முன்னொரு பேட்டியில், தன் சகோதரி சிறுவயதில் இருந்தே உருவக் கேலியால் வருந்தியவர் என்றும், அப்படி புற அழகை சார்ந்த எதிர்பார்ப்புகளை தான் எதிர்ப்பவர் என்றும் கூறி, அதனால்தான் முகப்பூச்சு விளம்பரங்களில் தான் நடிப்பதில்லை எனவும் கூறியிருந்தார் என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டியது.
பொதுவாக பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என ஒரு முன்கருத்தை கொண்டிருப்பது பொதுசமூக மனநிலை. அழகு என்பதை நிறம், எடை, உடை என அளவீடுகளால் அளந்து சொல்வதும், அதில் மாறுபட்டவர்களை பகடி செய்வதும், பிழையெனும் புரிதல் இப்போது ஏற்பட தொடங்கியிருக்கிறது. பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனம் அதன் வர்த்தக பெயரை 'ஃபேர் அண்டு லவ்லி' என்பதிலிருந்து 'ஃபேர் அண்டு க்ளோ' என மாற்றியது அதற்கான சிறிய உதாரணம். இந்நிலையில், ஒருவரின் உருவத்தை விமர்சிப்பது தனிநபர் கேலி என்பதாக மட்டும் கருதி புறந்தள்ள கூடாது என்றும், உருவ கேலியால் நம்பிக்கை இழந்து, விமர்சனங்களுக்கு பயந்து தன் திறமைகளை வெளிப்படுத்தாத எத்தனையோ பேரின் உளச்சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியவை என்றும் கூறுகிறார்கள் சமூக விமர்சகர்கள்.