தமிழ்நாடு

"பெண் மென்மையானவள் என அரசியல் செய்கிறது இச்சமூகம்; மானே தேனேனு ஏன் சொல்றீங்க?"- ரோகினி

"பெண் மென்மையானவள் என அரசியல் செய்கிறது இச்சமூகம்; மானே தேனேனு ஏன் சொல்றீங்க?"- ரோகினி

webteam

“மென்மையானவர்கள் பெண் என்றும், வலிமையானவர்கள் ஆண் என்றும் தமிழ் மொழியின் மூலம் அரசியல் செய்து அடக்குமுறை நடக்கிறது” என ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரோகிணி குற்றம் சாட்டினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இயங்கும் பகிர்வு அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. டிபி மில்ஸ் சாலையில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் நடிகையும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவருமான ரோகிணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடக்கத்தில் அரசியல், கல்வி, மருத்துவம், சமூக சேவை, இளம் வயதில் மருத்துவ படிப்பு, பொதுவுடமை போராட்டம் என பல்வேறு துறைகளில் முன்னேறி வரும் பெண்களுக்கு நடிகை ரோகிணி விருது வழங்கி பாராட்டினார்.



பின்னர் அவர் பேசும் போது, “தங்களுக்கு பிடித்த படிப்பை கூட பெண்களால் சுயமாக முடிவெடுத்து படிக்க முடிவதில்லை. ஆணுக்கு வழங்கப்படும் கல்வி கட்டணம் நல்ல முதலீடு, பெண்ணுக்கு வழங்கப்படும் கல்வி கட்டணம் என்பது தேவையற்ற முதலீடு என பெற்றோர்கள் நினைப்பதால் பெண்களின் விருப்பம் அடிபட்டு விடுகிறது. எழுதுகோல் பெண்கள் கையில் சென்ற பிறகு கிடைத்த கதைகள் போன்று, கேமரா பெண்கள் கையில் சென்றால் திரைப்படமும் குறும்படங்களும் தயாரிப்பில் கதைகள் சொல்லும். பெண்களுக்கு சினிமாவை கற்றுக் கொடுங்கள்.

மகளிர் தினம் குறித்து பேசினால் மட்டும் போதாது. என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. மனமிருந்தால் செய்யலாம். மகளிர் தினத்திற்கு ஆடை வாங்கி கொடுத்தால் மட்டும் போதாது. வீட்டு வேலைகளில் பாதியை ஆண்கள் செய்ய வேண்டும். மென்மையானவர்கள் பெண் என்றும், வலிமையானவர்கள் ஆண் என்றும் தமிழ் மொழியில் பிரித்து வைத்து அரசியல் செய்கின்றனர். இதில் அடக்கு முறை உள்ளது. இதற்கு பெண்கள் ஆளாகி விடாமல், ஜாக்கிரதையாக கையாள வேண்டும். ‘மானே தேனே’ என்றால் பெண்கள் உருகி விட வேண்டாம். சிங்க பெண்ணே என்று சொல்வதில் என்ன பிரச்சனை?

துப்புரவு பணிகளுக்காக தேர்வு செய்யப்படும் ஒடுக்கப்பட்ட சமுதாயம் குறித்து நாம் அதிகளவில் பேசுகிறோம். அந்த சமுதாயத்தில் உள்ள பெண்கள் என்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களால் ஒடுக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் தான் பெண்கள் உள்ளனர். இந்த நிலையை மாற்ற இது போன்ற நிகழ்வுகள், பேச்சுகள் தேவை. விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படங்கள் தேவை. படங்கள் குறித்த விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்” என்றார் அழுத்தமாக.