நடிகை கஸ்தூரி pt web
தமிழ்நாடு

ஹைதராபாத் | முற்றுகையிட்ட காவல்துறை.. உள்பக்கம் தாழிட்டுக்கொண்ட கஸ்தூரி.. கைதின் போது நடந்தது என்ன?

நேற்று ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தத் திட்டம்..

ஜெ.அன்பரசன்

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கஸ்தூரி

புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் நடிகை கஸ்தூரி மீது இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அளிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானதால் இரண்டு தனிப் படைகள் அமைத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனால், நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் ஹைதராபாத் மற்றும் ஆந்திராவில் முகாமிட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று ஹைதராபாத் புப்பலகுடா என்ற இடத்தில் பதுங்கி இருந்தபோது நடிகை கஸ்தூரியை நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதின் போது நடந்தது என்ன?

காவல்துறை தன்னை கைது செய்ய வருவதை அறிந்த கஸ்தூரி வீட்டின் உள் அறையில் பூட்டிக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ஹைதராபாத் காவல்துறையின் உதவியை நாடிய தமிழக காவல்துறையினர், கதவை உடைத்து கஸ்தூரியை கைது செய்துள்ளனர்.

ActressKasturi

தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருக்கும் போது நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில், ஹைதராபாத் அருகே புப்பாலகூடா பகுதியில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு, விசாரணைக்காக அழைத்துவரப்பட்டார்.

யாருடைய தூண்டுதலின் பேரில் தெலுங்கு மக்கள் குறித்து இவர் இழிவாகப்பேசினார்? என்பது குறித்தெல்லாம் விசாரிக்க இருப்பதாகவும், அவரிடம் வாக்குமூலம் பெற இருப்பதாகவும் சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணை முடிக்கப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.